எப்போது தேர்தல்? - 17ஆம் திகதி கூட்டத்தில் முடிவு!
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அடங்கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்கங்களையுடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத்திணைக்களத்தின் பிரதானி கங்காணி கல்பனி தெரிவித்தார்.
எனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதியினை அறிவிக்கும் பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் செல்கிறது. அதற்கிணங்க எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின்போது தேர்தல் நடைபெறும் திகதி பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிக்குள் ஒரு தினத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டு வந்தது. எனினும் அதற்கான பணிகள் நிறைவுசெய்யப்பட்டதுடன் கடந்த முதலாம் திகதி குறித்த வர்த்தமானியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டு அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தார். எனவே ஒன்பது நாட்கள் கடந்துள்ள நிலையில் நேற்றைய தினமே அவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானியில் நான்காயிரத்து எண்ணூற்று நாற்பது தொகுதிகள் வகுக்கப்பட்டுள்ளதுடன் 341 உள்ளூராட்சிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வுள்ளூராட்சி மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதேவேளை இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆகவே புதிய தேர்தல் முறையூடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட ஆறு உள்ளூராட்சி மன்றங்கள் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அக்கரபத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், பொலநறுவை ஆகிய பிரதேச சபைகளும் பொலநறுவை மாநகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதிலும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் அவ்வாறானதொரு பிரதேச சபை உருவாக்கப்படவில்லை. எனவே கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. ஆகவே தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.