SuperTopAds

மட்டக்களப்பு கச்சேரியில் சமுர்த்தி நிதி 57 இலட்சம் ரூபா மோசடி! - 8 பேர் கைது!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு கச்சேரியில் சமுர்த்தி நிதி 57 இலட்சம் ரூபா மோசடி! - 8 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள உள்ள தலைமை சமுர்த்தி திணைக்கள சமூக பாதுகாப்பு மையப்பகுதிக்கான 57 இலட்சம் ரூபா நிதியினை காசோலை மூலம் மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 8 பேரை நேற்று கைது செய்ததுடன் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த திணைக்களத்தின் வங்கி வைப்பில் இருந்த சமூக பாதுகாப்புக்காக நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அங்கு கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் சிவலிங்கம் குகபரன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.டி.கீதாவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஆகியோரின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.என் பண்டார சாஜன், கே.சி.எம். முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள உள்ள தலைமை சமுர்த்தி திணைக்களத்தின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த பிரதாப் என்று அழைக்கப்படும் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வங்கியில் சமூக பாதுகாப்புக்காக வைப்பிலிடப்பட்டுள்ள நிதியை மோசடி செய்துள்ளார்.

வங்கி காசோலையில் மாவட்ட அரசாங்க காரியாலய பிரதம கணக்காளர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர் ஆகிய இருவரினதும் கையொப்பத்தை இட்டு 57 இலட்சம் ரூபாவை மோசடியாக மாற்றி அதனை புல்லுமலை பிரதேசத்திலுள்ள 6 பெண்களின் வங்கி கிளையில் ஒருவருக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் வைப்பிலிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்களை கொண்டு 37 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் இருந்து எடுத்துள்ளதுடன், மிகுதி 21 இலட்சம் ரூபா மாற்றப்படாமல் இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் பிரதான சந்தேக நபரான சமுர்த்தி உத்தியோகத்தர், அவருக்கு உடந்தையாக இருந்த இளைஞர் மற்றும் 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதுடன் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பத்தில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.