ஆறுமுகன் தொண்டமானின் மகனைக் கைது செய்ய உத்தரவு
மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரான ஆறுமுகன் தொண்டமானின் மகனைக் கைது செய்து ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்டிருந்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சாமிமலை – ஓல்டன் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழுவினர் குடும்பஸ்தர் ஒருவரை தாக்கியதாக பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய இன்று (திங்கட்கிழமை) காலை மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர், வெள்ளையன் தினேஸ் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நால்வரும் இன்று ஹட்டன் நீதிமன்ற நீதவான், டி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, அவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, நான்கு பேரையும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கைது செய்து ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு ஹட்டன் நீதிமன்ற நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது