SuperTopAds

பசு மட்டை திருடிக்கொண்டு நடந்து சென்ற திருடர்கள், பொதுமக்கள் மடக்கியதால் தப்பி ஓட்டம்! யாழ்.மீசாலையில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
பசு மட்டை திருடிக்கொண்டு நடந்து சென்ற திருடர்கள், பொதுமக்கள் மடக்கியதால் தப்பி ஓட்டம்! யாழ்.மீசாலையில் சம்பவம்...

பசு மாட்டை திருடிக்கொண்டு சென்ற சமயம் ஊர் மக்கள் கண்டதால் பசு மாட்டை விட்டு திருடர்கள் தப்பி ஓடிய சம்பவம் தென்மராட்சி மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பின்னர் பசு பாதுகாப்பாக மீட்கப்பட்டு பசுவின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் மீசாலை வடக்கு எல்லை வீதியால் பசு மாடொன்றை இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட ஊரவர்கள் யாருடைய மாடு? எங்கே கொண்டு போகிறீர்கள்? என விசாரித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் துவிச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்ததாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் இருவரும் சரியாகப் பதிலளிக்காமல் பசுமாட்டைக் கைவிட்டுச் சைக்கிளில் ஓடித் தப்பியுள்ளனர்.

பசு மாட்டைப் பிடித்த ஊரவர்கள் இதுதொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிற்குத் தகவல் வழங்கிய நிலையில் மறுநாள் காலையில் பொலிஸார் குறித்த பசுமாட்டைப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். 

பின்னர் குறித்த பசுமாடு தன்னுடையது எனவும், திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து  மந்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் மறுநாள் சனிக்கிழமை காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குச்  சென்று உரிமை கோரியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் மாலை வரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டு மாலை  ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மீசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக் காலமாகத் தொடர் மாடுகளின் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இது தொடர் திருட்டுக் குற்றவாளிகளைக் கூடிய விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.