யாழ்.கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னாள் நகரசபை உறுப்பினரின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்!
யாழ்.கைதடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சனை அங்கு சீருடையில் நின்ற PC இலக்கம் 76053 உடைய பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதோடு தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் என்றால் அடங்கி இருக்க வேண்டும் என்று கூறி எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்றைய தினம் கைதடி ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. இதன்போது நீண்ட வரிசையில் மக்கள் நின்று எரிபொருளை பெற்றனர்.
இதனிடையே அங்கு கடமையில் நின்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் தமக்கு தெரிந்தவர்களை வரிசையில் நிற்கவிடாமல் பெற்றோல் நிரப்ப அனுமதித்துள்ளார். இதனை அவதானித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் மக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று எரிபொருள் பெற வருகிறார்கள்.
ஆனால் நீங்கள் இடையிடையே உங்களுக்கு வேண்டியவர்களை அனுமதிக்கிறீர்கள் அப்படி செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் முன்னாள் நகரசபை உறுப்பினரோடு முரண்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தரும் பொலிஸாரும் ஒரு கட்டத்தில் எல்லை மீறி தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுதர்சனின் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் அங்கு நின்றவர்கள் அச்சமடைந்ததோடு பலர் எருபொருள் நிரப்பாமல் திரும்பி சென்றதையும் காணமுடிந்தது. நேற்று இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற அச்சுறுத்தல் சம்பவம் அங்குள்ள சி.சீ.ரீ.வி கமெராவில் பதிவாகியுள்ளது