SuperTopAds

வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களின் நேரடியான பாரிய முதலீடுகளுக்கு இவர்கள்தான் தடை..! அம்பலப்படுத்திய புலம்பெயர் முதலீட்டாளர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களின் நேரடியான பாரிய முதலீடுகளுக்கு இவர்கள்தான் தடை..! அம்பலப்படுத்திய புலம்பெயர் முதலீட்டாளர்..

வடமாகாணத்தில் வெளிநாட்டு நிதியை நேரடியாக கொண்டுவருவதற்கும் எமது பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இங்குள்ள அரச அதிகாரிகள் மிகப்பெரும் தடையாக உள்ளனர். என புலம்பெயர் முதலீட்டாளர் வாசுதேவன் இராசையா சுட்டிக்காட்டியுள்ளார். 

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 40 வருடங்களாக வெளிநாடுகளில் பல்வேறுபட்ட தொழில் நிறுவனங்களை நடத்திய தமிழர்கள் 

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளனர். பல வருடங்களாக யுத்த சூழ்நிலையில் இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களையும் எதிர்கால தொழிற்துறைகளையும் அபிவிருத்தி செய்வதே புலம்பெயர் தமிழர்களின் நோக்கம்.

ஆனால் எமது முதலீட்டாளர்கள் தமது செயல் திட்டங்களை வடமாகாணத்தில் செயல்படுத்த முனையும்போது பல்வேறுபட்ட தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 800 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பதினைந்துக்கும் மேற்பட்ட திட்டங்களை செயற்படுத்த எண்ணினோம்.

ஆனால் அப்போதைய அரச அதிபர் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை விரைவுப்படுத்த பணி செய்யாமல் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்பட்டமை கவலை அளிக்கிறது. 

வடக்கில் ஐந்து பிரதான தொழில்துறைகளின் கீழ் எமது திட்டங்களை வகைப்படுத்தினோம். மீன்பிடி, சுற்றுலாத்துறை, விவசாயம், கைத்தொழில்துறை மற்றும் ஏற்றுமதியை நோக்கிய திட்டங்கள். 

இவை அனைத்திற்கும் எமது தொழில்துறை வல்லுனர்களை அழைத்து ஒரு மாத காலமாக யாழ்ப்பாணத்தில் தங்க வைத்து அதற்கான திட்டங்களை வகுத்தும் அவை அனுமதிக்காமை ஏன் என புரியவில்லை.

அரசாங்கம் டொலர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அதனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தயாராகவே இருக்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வரும்போது 

நமது திட்டங்களை காலம் தாழ்த்துவது பொறுப்பான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் வாங்கிக் கொடுப்பதற்காக செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் அழுகின்றது. 

புலம்பெயர் தமிழர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்கு வரவில்லை சட்ட விரோதமாக பணத்தைக் கொண்டு வரவில்லை சட்ட விரோத செயற்பாடுகளுக்காக திட்டங்களை வகுக்க வில்லை இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்தும் புரியாமல் செயல்படுகிறார்கள். 

ஆகவே பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை கட்டி எழுப்புவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்ற நிலையில் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்கி வடக்கு கிழக்கு மாகாணங்களை கட்டி எழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.