SuperTopAds

9ம் திகதி யாழ்.மாவட்டத்தில் மாபெரும் துவிச்சக்கர வண்டி பேரணி..! பொது அமைப்புக்கள் - அரசியல் தரப்புக்கள் கூட்டாக முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I
9ம் திகதி யாழ்.மாவட்டத்தில் மாபெரும் துவிச்சக்கர வண்டி பேரணி..! பொது அமைப்புக்கள் - அரசியல் தரப்புக்கள் கூட்டாக முஸ்தீபு..

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும். எனக்கோரி யாழ்.பல்கலைகழகத்திலிருந்து துவிச்சக்கர வண்டி பேரணி ஒன்றை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் சில கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன. 

எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.பல்கலைகழகத்திலிருந்து யாழ்.நகரம் நோக்கி இந்த துவிச்சக்கர வண்டி பேரணி நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஒழுங்கமைப்பாளர்கள் தொிவித்திருக்கின்றனர். 

இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லுாரி சுற்றாடலில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஒழுங்கமைப்பாளர்களான சிவில் அமைப்புக்கள் மேற்படி விடயத்தை தொியப்படுத்தியிருக்கின்றனர். 

இது தொடர்பில் மேலும் அவர்கள் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்ததாவது, 

யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு, யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக் குழு, தேசிய கலை இலக்கிய பேரவை, தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம், 

குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனிஸ கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகிய பொது அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 9 ஆம் திகதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகளால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் சபா தனுஜன், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மனோரஞ்சன், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனிஸ கட்சியின் செல்வம் கதிர்காமநாதன், பன்மைத்துவ மக்களாட்சி மன்றத்தின் செ.திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.