யாழ்ப்பாணம் - சுன்னாகம் பேருந்தில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிகொடுத்த பெண்! மின்னல் வேகத்தில் செயற்பட்டு பணத்தை மீட்ட பொலிஸார், மக்கள் பாராட்டு..
பேருந்தில் 96 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல்போன நிலையில், போக்குவரத்து பொலிஸாரின் தீவிரமான முயற்சியினால் அந்த பணத்தின் பெரும் பகுதி அடுத்த சில நிமிடங்களில் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் நேற்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
ராஜலட்சுமி சௌந்தர்ராஜன் (வயது62) என்ற பெண் யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்துள்ளார். இதன்போது வங்கிலிருந்து எடுக்கப்பட்ட 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் தனது கைப்பையில் வைத்திருந்த நிலையில் பணம் காணாமல்போயுள்ளது.
இந்நிலையில் யாழ்.இந்துக்கல்லுாரிக்கு அருகில் அழுதபடி பேருந்திலிருந்து இறங்கிய பெண் அந்த பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸாரிடம் விடயத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து மின்னல் வேகத்தில் செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்ணின் அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி தங்களை பின்தொடருமாறு கூறிவிட்டு பேருந்தை துரத்திச் சென்று கொக்குவில் சந்தியில் மடக்கியுள்ளனர்.
பின்னர் பேருந்தை சோதனையிட்டபோது அங்கே பணம் இல்லை. ஆனாலும் விடாத பொலிஸார் பேருந்து சாரதியிடம் நடந்த சம்பவத்தை கூறி சகலரையும் சோதிக்கப்போவதாக கூறியதுடன், சோதனை நடவடிக்கையை தொடங்கினர்.
இதன்போது சோதனைக்குட்படாத சிலரின் அருகில் நிலத்தில் பணம் கிடந்துள்ளது. அதனை மீட்ட பொலிஸார் எண்ணிப் பார்த்தபோது 89 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த பெண் தமக்கு அவ்வளவு பணம் திரும்ப கிடைத்ததே பொிய விடயம் என கூறி அந்த பணத்தை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் போக்குவரத்து பொலிஸாரை துாக்கி மகிழ்ச்சிப்படுத்தினர்.