7 லட்சம் தொடக்கம் 10 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு கடற்படைக்கு தகவலும் வழங்கும் ஆள்கடத்தல் கும்பல்..! அம்பலமான உண்மை தகவல்..
சட்டவிரோதமாக படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பவதாக கூறி பொதுமக்களிடம் பணம் கறக்கும் கும்பல் தொடர்பான பல தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைய முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 250 பேர் கடற்படை நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த மனித கடத்தல் இடம்பெற்று வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு
மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குறைந்தபட்சம் கிறிஸ்மஸ் தீவின் மணலைக்கூட மிதிக்க முடியவில்லை என்றும்,
அவர்களது உடைமைகள் அனைத்தும் கடத்தல்காரர்களுக்கு பலியாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.