யாழ்.உரும்பிராயில் நிபந்தனைகளை மீறி மண்ணெண்ணெய் விநியோகம்..! கமநலசேவை அதிகாரிகள் அசமந்தம்..
யாழ்.மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் பிரதேசமட்ட கமநல அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட கோப்பாய் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் கமநல சேவைத் திணைக்களம் ஊடாக விநியோகிக்கப்பட்ட விவசாய அட்டை மூலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மண்ணெண்ணெய் விநியோகம் ஒரு பரப்புக்கு ஒரு தடவை இறைப்பதற்கு அரை லீட்டர் என்ற வகையில் கணிப்பீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோப்பாய் பிரதேசத்தில் உள்ள உரும்பிராய் கமநல சேவைத் திணைக்களத்தில் விவசாயிகளால் செய்கை பண்ணப்படும் நிலப்பரப்பின் அளவுகளை கவனத்தில் கொள்ளாது தமது பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும்
5 லிட்டர் என்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக குழப்பமடைந்த விவசாயிகள் வேறு இடங்களில் பரப்பின் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிற போதும் தாம் அதிக பரப்புகளில் வெங்காயச் செய்கை மற்றும் மிளகாய்ச் செய்கை செய்கின்ற நிலையில்
5 லீட்டர் மண்ணெண்ணெய் போதாது என குழப்பம் அடைந்தனர். மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் விவசாயிகள் மண்ணை பெறுவதற்காக பங்கீட்டு அட்டை ஒன்றை தயாரித்து வழங்கப்பட்டபோதும் உரும்பிராய் கமநல சேவைத் திணைக்களத்தில் மட்டும்
4 பேருக்கு மட்டும் குறித்த பங்கீட்டு அட்டை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறப்போகிறது என அறிவிக்கப்பட்ட பின்னரே தமது விவசாய நிலங்கள் பார்வையிடப் பட்டதாகவும் பெரும்பாலான பகுதிகள் இன்னும் பார்வையிட வில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
அதுமட்டுமல்லாது அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் அடிக்கடி மாறுபட்ட தகவல்களை வழங்குவதால் தாம் அலைக்களிவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட கமநல உதவி ஆணையாளர் நிஷாந்தனைத் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் தாம் ஆராய்வதாக தெரிவித்தார்.