வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட 138 வைத்தியர்களில் 132 பேர் கடமைகளை பொறுப்பேற்றனர்..!
வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 138 வைத்தியர்களில் 132 பேர் தங்களது கடமைகளை இதுவரையில் பொறுப்பேற்றுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
வைத்தியர்கள் நியமனம் தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இதில் யாழ் மாவட்டத்திற்கு 23 வைத்திய அதிகாரிகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும் வவுனியா மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும்
மன்னார் மாவட்டத்திற்கு 35 வைத்திய அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 31 வைத்திய அதிகாரிகளும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் என்றுள்ளது.