சத்தமின்றி மாகாண அரசுக்குட்பட்ட வைத்தியசாலைகளில் கைவைக்கிறது அரசாங்கம்! எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்..
வடமாகாணசபைக்குட்பட்ட 4 வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் திடீரென வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைக்கு நேற்று அனுப்பபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மாகாண அரசாங்கத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட 9 வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதற்கமைய வடமாகாணத்தில் 4 வைத்தியசாலைகள் தொிவு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மருத்துவமனைகளே இவ்வாறு தொிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தொிவிக்கப்பட்டதுடன் மாகாண அரசின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கை என்றும் சாடப்பட்டிருந்தது. கடந்த 25ம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதேவேளை நாடு முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டிருந்த 9 மருத்துவமனைகளில் வடமாகாணத்தின் 4 வைத்தியசாலைகள் தவிர்ந்து தென்னிலங்கையில் உள்ள 5 வைத்தியசாலைகளில் 4 வைத்தியசாலையில் மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசாங்கத்தினால் கேள்வி கோரல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் நேற்று முன்தினம் கடமைக்கு சமூகமளித்தனர். இதேவேளை ஏற்கனவே மாகாண நிர்வாகத்தால் கேள்வி கோரல்மூலம் தொிவு செய்யப்பட்ட
தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் கடமையில் இருந்தனர். மாகாண நிர்வாகத்திற்கு எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கப்படாமல் மத்திய அரசு இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து மாகாண மருத்துவமனைகளை சத்தம் சந்தடியில்லாமல் மாகாண நிர்வாகத்திற்கு அறிவிக்காமல்
மத்திய அரசின் கீழ் உள்வாங்கி உள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது.