ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக விடயத்தில் அரசாங்கத்தினை பிழை சொல்ல முடியாது
அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ கூட ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஜசாசா விடயத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை(3) மதியம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
முஸ்லீம் சமூகம் நீண்டகாலமாக எதிர்பார்த்த செய்தி ஒன்று நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.அது தான் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாசாக்களை அடக்கலாம் என்று அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாகும்.அரசாங்கத்திடம் இதே இடத்தில் இருந்து தான் இவ்விடயம் குறித்து வர்த்தமானி அறிவித்தலை விடுமாறு கோரிக்கை ஒன்றினை நாம் விடுத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.அந்த வகையில் அப்போது சொன்னோம் மஹிந்த ராஜபக்ச அவர்கள் மிக தெளிவாக பாராளுமன்றத்தில் ஜனாசா நல்லடக்கம் செய்வதற்காக இடம் தருவதாக கூறியிருந்தார்.ஆனால் இடையில் ஒரு சிலர் குழப்பி விட்டதன் காரணமாக அது தடங்கல் ஏற்பட்டு இப்பொழுது வர்த்தமானி அறிவித்தல் வந்ததன் மூலம் 100 வீதம் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த வகையில் முதலில் இவ்விடயத்திற்காக எல்லா வல்ல இறைவனுக்கு உலமா கட்சி நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ கூட ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும் .இடையில் எதிர்கட்சிகளின் செயற்பாட்டினால் தான் தடைக்கல் ஏற்பட்டு நீண்டு இப்பிரச்சினை சென்றுள்ளது என கூறலாம்.ஆனால் இப்பொழுது தடைக்கல் நீக்கப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையின் பின்னர் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே இதனை அவரது வருகையினால் கிடைத்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இங்குள்ள எதிர்கட்சிகள் முஸ்லீம் கட்சிகள் கூட பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்ட போதிலும் இவ்விடயத்தில் அரசினை அடிபணிய வைக்க முடியவில்லை.இம்ரான் கானின் அன்பான வேண்டுகோளை ஏற்று அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது சண்டித்தனத்திற்கு அடிபணியாது.நிச்சயமாக அன்பிற்கு மாத்திரம் அடிபணியும் என்பதை ஜனாசா விடயத்தில் கண்டுள்ளோம்.நாட்டில் சிறுபான்மையினருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முஸ்லீம் கட்சியினர் சரியான முறையில் அதனை அணுக வேண்டும் என்பதை இந்த நாட்டின் பிரஜை என்ற முறையில் கூற விரும்புகின்றேன்.அதனை வைத்து மக்கள் மத்தியில் மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என அவர்களை கேட்க விரும்புகின்றோம்.மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் கூட இவ்வாறான பிரச்சினைகளில் பல்வேறு அணுகுமுறைகளை எமக்கு காட்டி தந்துள்ளார்.அவர் மட்டுமல்ல முன்னர் வாழ்ந்த முஸ்லீம் அரசியல் தலைவர்களான சேர் ராசிக் பரீட் பதுறுதீன் மஹ்மூத் ஆகியோர் அரசாங்கத்தை சரியான முறையில் அணுகி முஸ்லீம்களை உசுப்பேத்தாமல் சலுகைகளையும் உரிமைகளையும் பெற்று தந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போல் செயற்பட முன்வர வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் ஜனாசா நல்லடக்கம் தொடர்பான விடயத்தினை பார்த்து பயந்து தான் அரசாங்கம் இவ்வாறான அனுமதியை கொடுத்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.இது ஒரு வேடிக்கையான விடயமாகும்.அப்பேரணி நடைபெற்று பல நாட்களாகி விட்டது.அவ்வாறு அரசாங்கம் அப்பேரணிக்கு பயந்திருந்தால் அவ்வேளையில் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் அறிவிப்பினை மேற்கொண்டிருக்கும்.அதாவது நாங்கள் ஏற்கனவே கூறியபடி இவ்வாறான பேரணி மூலம் அரசாங்கத்தை அடிப்பணிய வைக்க முடியாது.அவ்வாறு பார்த்தால் எத்தனை பேரணி நடத்தினார்கள்.இலங்கையில் மாத்திரமல்ல இலண்டனிலும் நடத்தி இருந்தார்கள்.ஆனால் அரசாங்கம் விட்டுக்கொடுக்கவில்லை.அரசாங்கமானது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஆளுங்கட்சியுடன் உள்ள முஸ்லீம் அரசியல் வாதிகளுடன் இருந்த அன்பினால் தான் இந்த அனுமதி நிலைக்கு வந்துள்ளது என்பதை தெளிவாக கூற முடியும்.இவர்கள் கூறுவதை போன்று பேரணிக்கு பயந்து தான் அனுமதி கிடைத்திருந்தால் எப்போதே கிடைத்திருக்கும்.
இப்பேரணியினால் முஸ்லீம் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மையாகும்.இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் முஸ்லீம் கட்சிகளின் வால்கள் தான்.ஆனால் முஸ்லீம் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.தலைவர்கள் முஸ்லீம் மக்களை வேறு திசையில் தள்ளி விட்டு விட்டு பிரதமருடன் புர்யாணி சாப்பிடுகின்ற நிலைமையினை தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.மக்கள் இவ்வாறானவர்களின் போலித் தன்மைக்கு மயங்கி விடக்கூடாது.இவர்கள் முஸ்லீம் மக்களை பாழ்கிணற்றில் தள்ளிவிட்டு அலரி மாளிகையில் புரியாணி சாப்பிடுபவர்களாகத் தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த நிலைமையினை நாம் மாற்ற வேண்டும் என்றார்.