SuperTopAds

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

ஆசிரியர் - Editor III
கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலினால்  மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி  கிளைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

திங்கட்கிழமை(1) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள இக்கிளைகள் சுகாதார துறையினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் ஏலவே மேற்குறித்த வங்கிக்கிளைகளில் கடமையாற்றியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக கடமைக்காக அருகில் உள்ள வங்கிக்கிளைகளின் ஊழியர்கள் கடமைக்காக தற்காலிகமாக அழைக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த மாதம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள  கல்முனை மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து கல்முனை மாநகரிலுள்ள பிரதான கிளை மூடப்பட்டிருந்தது.மேலும் முகாமையாளர் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை அம்பாறை மாவட்டத்தில்  கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட 3வது மக்கள் வங்கிக்கிளை இதுவாகும்.

அத்துடன் கடந்த மாதம் இறுதி கிழமைகளில்  சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கிளையில்  பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து   சாய்ந்தமருதுக்கிளையும் கடந்தவாரம் மூடப்பட்ட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதே போன்று கடந்த மாதம் கொரோனாத்தொற்று காரணமாக 14 நாட்கள் மூடப்பட்டிருந்த காரைதீவு மக்கள் வங்கிக்கிளையும் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை(25)  திறக்கப்பட்டது.

காரைதீவு மக்கள் வங்கிக் கிளையில் 3 ஊழியருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனைத் தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் கொரோனா வைரஸ் தொற்று அபாய  வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைடுறைகளை கடைப்பிடிக்குமாறும்இ கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்திருந்தார்.

நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்களின் சதவீதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  மக்கள் வங்கிகளில் ஏனைய கிளைகளில்  கடமையாற்றும் ஊழியர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.