SuperTopAds

சம்மாந்துறையில் தனியார் கல்வி நிலைங்களை மீள திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறையில் தனியார் கல்வி நிலைங்களை மீள திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலைங்களை கற்பித்தல் செயற்பாட்டிற்காக மீளதிறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான ஆராயும் விசேட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(22) இடம்பெற்றது.  

 

கோரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த  தனியார் கல்வி நிலையங்களை சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 25ஆம் திகதி அரசாங்கம் மீள திறக்குமாறு அறிவித்துள்ளது. 

இதன்போது கல்வி கற்கும் மாணவர்களின் சுகாதார  நடைமுறைகள் சமூக இடைவெளி பேணல், முககவம் அணிதல் தொற்று நீக்கி பாவனை,  நாளாந்தம் வருகை தரும் மாணவர்களுக்கு பதிவேடு பேணுவது, கல்வி நிலையத்தின் அடிப்படை சுகாதார நடைமுறைகளை மேம்படுத்தி தனியார் கல்வி செயற்பாடுகள் முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.     

 

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சபூர் தம்பி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்  ஐ.எல். றாசிக், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.