பிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணையால் காரைதீவு சபையில் அமைதியின்மை
பிரதிதவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரேரணை கொண்டுவந்தபோது வாத பிரதி வாதங்களால் சபை அமர்வு முற்றுபெறாமல் இடைநடுவில் குழப்பம் ஏற்பட்டதும் தவிசாளரினால் மறு அறிவித்தல் வரை சபை ஒத்திப்போடப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்று (22) தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது காரைதீவு பிரதேச சபைக்கு வெளியே மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் பிரதிபலிப்பாக பிரதிதவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரேரணை கொண்டுவந்தபோது வாத பிரதி வாதங்கள் முற்றி சலசலப்பில் முடிந்ததால் சபை அமர்வு முற்றுபெறாமல் இடைநடுவில் குழப்பம் ஏற்பட்டதும் தவிசாளரினால் மறு அறிவித்தல் வரை சபை ஒத்திப்போடப்பட்டது.
சுயட்சை குழு சார்பிலான பிரதேச சபை உறுப்பினர் சஷி, தனது பிரதேச நீர்ப்பாசன அதிகாரி, கிராம நிலதாரி, நியாயம் கேட்க வந்த தவிசாளர் போன்றோரை பிரதேச சபை பிரதிதவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மாளிகைக்காடு பிரதேசத்தில் வைத்து தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியதாகவும் கூறி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி பிரேரனை ஒன்றை சபையில் முன்வைத்தார். இப்பிரேரணை தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் பல தடவைகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இறுதியாக வாக்கெடுப்பில் பிரதிதவிசாளர் அடங்களாக ஆறு உறுப்பினர்கள் பிரதிதவிசாளருக்கு ஆதரவாகவும் பிரேரணை கொண்டுவந்த உறுப்பினர் சஷி, தவிசாளர் அடங்களாக 04 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
புதிய நியமன முரண்பாடு காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபை அமர்விலிருந்து இடையில் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் 10 உறுப்பினர்களை மட்டுமே சபையில் இருந்தனர். வாக்கெடுப்பில் திருப்தில்லை என்ற நிலை உருவானதும் தவிசாளருக்கும் பிரேரணையை எதிர்த்த உறுப்பினர்களுக்குமிடையே கடுமையான கூச்சல் நிலை உருவானதும் இனவாத கருத்துக்களை அதிகமாக அள்ளிவீசப்பட்ட நிலையில் சபை அமர்வை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பதாக தவிசாளர் அறிவித்து விட்டு சபா மண்டபத்திலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து சபை அமர்வின் நிகழ்ச்சிநிரல்கள் முற்றுபெறாமல் நிறைவுக்கு வந்தது.