மோகனதாஸின் சடலத்திற்கு பதிலாக செல்வராசாவின் சடலத்தை வழங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை..! 15 வயது சிறுமி கண்டுபிடித்ததால் குழப்பம், இனி இப்படி நடக்காதாம்..
கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த திருவையாறு பகுதியை சேர்ந்த கோ.மோகனதாஸ் என்பவருடைய சடலத்திற்கு பதிலாக வேறு ஒருவருடைய சடலத்தை உறவினர்களிடம் வழங்கியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் உறவினர்களிடம் வருத்தம் தொிவித்துள்ளதுடன்,
இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காது. எனவும் நடந்த சம்பவம் தொடர்பான உண்மை தன்மை தொடர்பில் ஆராயப்படும் எனவும் அறிவித்திருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் திருவையாறை சேர்ந்த கோ.மேகனதாஸ் (வயது55)
கனகாம்பிகை குளத்தை சேர்ந்த க.செல்வராசா (வயது61) ஆகிய இருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மோகனதாஸின் பீ.சி.ஆர் முடிவுகள் முதலில் கிடைக்கப்பெற்ற நிலையில் கொரோனா தொற்று இல்லை என்பதால்
அவருடைய சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் செல்வராசாவின் பீ.சி.ஆர் முடிவுகள் இன்று காலையே கிடைத்த நிலையில் அவருடைய சடலம் வைத்தியசலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் மோகனதாஸின் உடலுக்கு பதிலாக செல்வராசாவின் உடலுக்கு
போஸ்மோட்டம் செய்யப்பட்டு சடலம் திருவையாற்றில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மரண சடங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது மோகனதாஸின் 15 வயதான மகள் இது தன் தந்தையுடைய சடலம் அல்ல என கூறியதை தொடர்ந்து உடனடியாக சடலம் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்,
பெரும் குழப்பம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்திடம் வினவிய போது, குறித்த சம்பவம் தொடர்பான உண்மைநிலை தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மனதினை வேதனைப்படுத்த விரும்பவில்லை எனவும், இவ்வாறான தவறுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாத வகையில்
வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். பிரேத அறையில் அடையாளம் காட்டப்பட்ட போதே தவறு இடம் பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.