SuperTopAds

நாடு மீண்டும் முடக்கப்படுமா..? கொவிட் -19 தடுப்பு செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா விளக்கம், மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் சமூகமட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்குமாக இருந்தால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்படும். எனவே அவ்வாறானதொரு நிலைக்கு செல்லவிடாது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சமூகத்தில் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய 16 வயதும் நேற்று மாலை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது. எனினும், மக்கள் பீதியடையாமல் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பின் கம்பஹா, திவுலப்பிட்டியப் பகுதியில் குறித்த குடும்பப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது தொடர்பில் சுகாதாரப் பிரிவினரும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் மினுவாங்கொடைப் பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்தமையால் குறித்த ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

அதேவேளை, அங்கு அவருடன் தொடர்புகளைப் பேணிய 400 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். ஏனெனில் குறித்த குடும்பப் பெண்ணுடன் தொடர்பைப் பேணிய பணியாளர்கள் நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எனினும், நாட்டை உடனே முடக்க மாட்டோம். தொற்றின் வீரியத்தையும் நாட்டின் நிலைமையையும் அவதானித்த பின்னரே ஊரடங்குச் சட்டத்தை நாடு முழுவதிலும் விஸ்தரிப்பது தொடர்பில் முடிவெடுப்போம்.தற்போது கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுகளின் 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மட்டுமே மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடு முழுவதும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றிலிருந்து இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.பல்லைக்கழகங்களுக்கான விடுமுறைகள் தொடர்பில் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தானது. அதன் தீவிரத்தன்மை இலங்கையில் இன்னமும் குறையவில்லை. 

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எத்தனை பாதுகாப்பு அடுக்குகளைத் தாண்டி அவரைக் கொரோனா தங்கியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.