கடத்தல்காரர்களிடம் பறித்த போதைப் பொருளை அவர்களிடமே விற்பனை..! 4 அதிகாரிகள் கைது, மில்லியன் கணக்கில் சொத்து..
கடத்தல்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்ட போதைப் பொருளை கடத்தல்காரர்களுக்கே விற்பனை செய்துவந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் உள்ளடங்கலாக 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சிஐடியினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார். சிஐடியினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளின் போது, போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவியமை ஊடாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் இந்த சந்தேக நபர்கள் நால்வரும்
31.1 மில்லியன் ரூபா வரை பணம் சம்பாதித்துள்ளமை தெரியவந்துள்ளது.பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் தென்மாகாணத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும்
சுமார் நூறு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீளபோதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய சிஐடியினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.கடந்த இரு வருடங்களுக்கு முதல் மினுவங்கொட பொலிஸ் பொறுப்பதிகாரியான
பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் மஹேஸ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கை ஒன்றின் போது ஐந்து கிராம் ஹெரோயினுடன் டையில் சமிந்த எனப்படும் சமிந்த தயா பிரியான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது ரிபிட்டர் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் திவுலப்பிட்டிய பகுதி தனியார் வங்கியொன்றினூடாக இலட்சக்கணக்கான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு பணியக சுற்றிவளைப்பு பிரிவு குழுவொன்றின் பிரதாணி விசாரணை என்ற பெயரில் டையில் சமிந்தவை சந்திக்க மினுவங்கொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது உனக்கு 100 கிலோ ஹெரோயின் வெள்ளை நிற வான் ஒன்றில் வந்துள்ளதே. அந்த பொருள் எங்கே? என டையில் சமிந்தவிடம் விசாரித்துள்ளார். இதன்போது டையில் சமிந்த ஆச்சரியத்துடன் அன்று சேரின் குழுவினர்தானே பொருட்களை கொண்டு வந்தீர்கள்
என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் மற்றொரு பொலிஸ் குழு மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்குச் சென்று டையில் சமிந்தவிடம் விசாரணைகள் நடத்தியுள்ளது.
இதன்போது டையில் சமிந்தவின் தொலைபேசியை கையேற்று நடாத்திய விசாரணைகளில் நீர் கொழும்பு பகுதியில் வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 6 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவரது சகோதரரின் வீடொன்றில் பாரிய தொகை போதைப்பொருள் இருப்பதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வீட்டை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக குழு சுற்றிவளைத்தபோது
அங்கிருந்த போதைப் பொருளை வான் ஒன்றில் வந்த மூவர் எடுத்துச் சென்றதாக அவ்வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் வானின் இலக்கத்தை அடையாளம் கண்டு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த லெகன் ஆர் ரக வானானது வத்தளை பகுதியில் உள்ள வாடகைக்கு வாகனங்களை கையளிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரணை செய்த போது அந்த வானானது ஒரு இலட்சம் ரூபா
மாத வாடகை அடிப்படையில், முதலில் மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்கு டையில் சமிந்தவை சந்திக்கச் சென்ற போதைப் பொருள் தடுப்பு பணியக சுற்றிவளைப்பு பிரிவொன்றின் பிரதானியால் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது டுபாயிலுள்ள போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் பொன்சேகா எனும் (சி.ஐ.டி. பொறுப்பிலுள்ள மாக்கந்துரே மதுஷின் சகா) நபருக்கும்,
போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் ஒரு குழுவால் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருளுக்கும் தொடர்புள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் குழு டையில் சமிந்தவுக்கு
ஒரு தொகை போதைப் பொருளை கிஹான் பொன்சேகாவின் ஆலேர்சனைக்கமைய பொல்வத்தை பகுதியில் வைத்து கையளித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி இந்த தகவல்களை மையப்படுத்தி இது குறித்த ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க
சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பிரதானி பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.அதன்படியே சி.ஐ.டி.யும் தேசிய உளவுத்துறையும்
இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்தன. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய நேற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா தலைமையிலான சி.ஐ.டி குழு போதைப் பொருள் தடுப்பு பணியக
பொலிஸார் நால்வரையும், சிவில் நபர் ஒருவரையும் கைது செய்தது. அவர்களை தடுப்பு காவலில் வைத்து குறித்த சி.ஐ.டி விசாரணை குழு தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.