SuperTopAds

பொலிஸார், படையினரின் சீருடையில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் அதி பயங்கர கொள்ளை கும்பல் சிக்கியது..! பல அதிர்ச்சி தகவல்களை கூறும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
பொலிஸார், படையினரின் சீருடையில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் அதி பயங்கர கொள்ளை கும்பல் சிக்கியது..! பல அதிர்ச்சி தகவல்களை கூறும் பொலிஸார்..

பொலிஸார், படையினர்போல் சீருடைகளுடன் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையிட்டுவந்த மிக மோசமான கொள்ளை கும்பல் ஒன்றினை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது 

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கொடமுள்ள பகுதியில் வீடொன்றுக்கு காரொன்றில் பொலிஸ் சீருடையில் சென்ற நால்வர் தங்களை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்தி கொரோனா நோய்த் தொற்று சந்தேக நபர்களை 

குறித்த வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக குறித்த வீட்டை முழுமையாக சோதனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் சீருடையில் அவர்கள் வருகை தந்த காரணத்தால் வீட்டில் இருந்தவர்கள் 

வீட்டை சோதனை செய்ய அனுமதித்தனர். இதன்போது வீட்டில் இருந்தவர்களை அறையொன்றில் பூட்டிவைத்து விட்டு வீட்டிலிருந்த சுமார் ஏழு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு இலட்சம் பெறுமதியான நகைகள், நான்கு கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கொச்சிக்கடை குற்றத்தடுப்பு பொலிஸார், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி காட்சிகளை பரிசீலித்து அவர்கள் வருகைதந்த வாகனத்தின் இலக்கங்களை கொண்டு சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கந்தானை மற்றும் பன்விலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடம் இருந்து வாடகைக்கு பெற்ற ஹைபிரிட் கார்கள் மூன்றும், ஜீப் ரக வாகனம் ஒன்றும், கையடக்க தொலைபேசிகள் மூன்று, உள்நாட்டு கைக்குண்டு ஒன்று, பொலிஸ் சீருடைகள் இரண்டு, 

இராணுவ சீருடைகள் இரண்டு, ஏழு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்தகாலங்களில் கொஸ்கொட சந்தி, கிறியுள்ள பகுதிகளிலும் இதேபோன்று கொள்ளையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே ஹெரோயின் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும், மேலும் இருவரை தேடிவருவதாகவும் கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.