ஜஸ்மின் சூகா மீது சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் புலனாய்வு பணிப்பாளர்!
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இலங்கை குறித்த இணையத்தளம் மூலம் ஜஸ்மின் சூகா வெளியிட்ட அறிக்கையால், புலனாய்வு அதிகாரியின் கௌரவத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, தனது சட்டத்தரணி ஊடாக ஜஸ்மின் சூகாவிற்கும் அவரது அமைப்பிற்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் புலனாய்வு அதிகாரியின் சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேஜர் ஜெனரல் சால்லேயிற்கு எதிராக பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளீர்கள்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டுகள் காரணமாக உள்நோக்கம் கொண்ட சக்திகள் புலனாய்வு பிரிவின் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சாலேயின் குணாதிசயங்கள் மற்றும் அவரது திறமையான செயற்பாடுகளிற்காகவே அவருக்கு பல்வேறு விருதுகள் கிடைக்கப்பெற்றன.
ஆகவே, ஜஸ்மின் சூகா எதிர்காலத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாவிடின் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டி ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.