திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடக்கவேண்டும்..! நீதிமன்றம் கேட்டால் நான் பதிலளிப்பேன், தேர்தல் ஆணைக்குழு செயற்பாட்டால் கடுப்பான ஜனாதிபதி..
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தப்பட்டால் நீதிமன்றுக்கு நான் பதிலளிப்பேன். திட்டமிட்ட திகதியில் நாடாளுமன்ற தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடாத்தியே ஆகவேண்டும். என ஜனா திபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருக்கின்றார்.
நீதிமன்றம் தடைவிதிக்காவிடின் திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்தது. தேர்தலை ஒத்திவைக்கும்போது ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு
அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது. எனவே, நாடாளுமன்றத்தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆகவேண்டும். அதற்குரிய சகல அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தையோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோரும் யோசனையையோ அல்லது அரசமைப்பைக் காரணம் காட்டி வர்த்தமானி அறிவித்தல் விடயத்தையோ அல்லது வேட்பு மனுத் தாக்கல் விவகாரத்தையோ காரணம் காட்டி
நாடாளுமன்றத் தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன் என்றார்.