புலம்பெயர்ந்த உடன்பிறப்புகளுக்கு அழைப்பு! எங்கள் வெற்றியில் பங்கு பெறுங்கள்!!. மனோ கணேசன்"
இலங்கையின் மிகப்பெரிய மாநகரம் கொழும்பு. இங்கே நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சுமார் ஒன்பது இலட்சம் பேர் வாழ்கிறார்கள். கொழும்பு மாநகரில்தான் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், அமைச்சுகள் மற்றும் சர்வதேச தூதரகங்கள் இருக்கின்றன. இங்கேதான் இந்நாட்டின் தேசிய அரசியல் மற்றும் வர்த்தக முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆகவே கொழும்பில் நாம் பலமான சமூகமாக வாழ வேண்டும். இங்கு எம் அரசியல் பலம் (Political Power) உறுதிப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம். கொழும்பில் எழும் எம் பலமிக்க அரசியல் குரல், வரலாறு முழுக்க எப்போதும் ஒலித்ததுப்போல், கொழும்பு வாழ் தமிழருக்காக மட்டுமல்லாமல், நாடெங்கும் வாழும் தமிழருக்காகவும், தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காகவும் ஒலிக்கும்.
எங்கள் கட்சி சின்னமான ஏணிக்கு கொழும்பில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்த நிலைப்பாட்டை சாத்தியமாக்கும்.
கொழும்பில், எங்கள் கட்சி எழுச்சி பெற முன், பெரும்பான்மை கட்சிகளே, தமிழர் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்தன. அதை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றி விட்டோம்.
கொழும்பின் களநிலைமை மற்றும் தேர்தல் சட்ட யதார்த்தம் கருதி பெரும்பான்மை கட்சிகளுடன் பொது தேர்தலில் “தேர்தல் கூட்டு” சேருவது என்பது வேறு. மாகாண, மாநகர தேர்தல்களில் நாம் “தனித்து” போட்டியிடுவது என்பது வேறு.
இந்நிலையில், எப்போதும்போல் இன்றும், தமிழர் வாக்குகளை “பங்கு” போட்டுக்கொள்ள, பெரும்பான்மை கட்சிகள், கொழும்பு மாநகர தேர்தலில் தங்களது தமிழ் முகவர்களை தமிழ் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளன. பல உதிரிகட்சிகளும், சுயேட்சை குழுக்களும். தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில், களமிறக்கப்பட்டுள்ளன. இவர்களது எஜமானர்களின் நோக்கம், கொழும்பு மாநகரில் தமிழர்கள், அரசியல் பலமிக்க சமூகமாக வாழக்கூடாது என்பதாகும். இந்த பிற்போக்கு கும்பலை நாம் எம் மக்கள் பலத்தால் தோற்கடிப்போம்.
இந்நிலையில், எனது இந்த கருத்துகளை உங்கள் மனதில் கொண்டு, கொழும்பு மாநகர எல்லைக்குள் வாழும் உங்கள் குடும்ப உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும், கொழும்பில் எங்கே அவர்கள் வாழ்ந்தாலும், தவறாமல் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளும்படியும், அப்படி வாக்களிக்கும் போது, அந்த வாக்கை தவறாமல் “ஏணி” (Ladder) சின்னத்துக்கு அளிக்கும்படியும் அறிவுறுத்துங்கள் என புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் என் இனிய உடன்பிறப்புகளை கோருகிறேன். அதன்மூலம் எங்கள் வெற்றியில் பங்கு பெறுங்கள் எனவும் அழைப்பு விடுக்கிறேன்.