கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம்: அதிரடிப் படையினர் குவிப்பு

ஆசிரியர் - Editor2
கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம்: அதிரடிப் படையினர் குவிப்பு

கதிர்காமம் நகரில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னால் தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறை அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் காவல்துறை, மருத்துவமனை மற்றும் அரசாங்க கட்டிடங்களுக்கு விசேடமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு காவல்துறை ஆணையை மீறி சென்ற உந்துருளி மீது காவல்துறையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கதிர்காமம் நகருக்கு வந்த பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு, காவல்துறை நிலையம் மீது கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் இதனை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் காவல்துறைக்கு மேலதிகமாக காவல்துறை அதிரடிப் படையினரும் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இன்று காலை 9.30 மணியளவில் மீண்டும் கதிர்காமம் காவல்துறைக்கு முன்னால் கூடிய பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதேசவாசிகள் காவல்துறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டயர்களை எரித்துள்ளனர்.

நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தங்காலைக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அதிகாரியின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு அமைவாக இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு வெய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரியொருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

Radio
×