SuperTopAds

இலங்கையில் மூதாட்டி மரணம்! நாயின் நெகிழ்ச்சியான தருணம்

ஆசிரியர் - Editor II
இலங்கையில் மூதாட்டி மரணம்! நாயின் நெகிழ்ச்சியான தருணம்

தன்னை வளர்த்த 70 வயதான மூதாட்டியின் சடலத்தை, அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சில நாட்களாகப் பாதுகாத்து வந்த நெஞ்சை உருக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு சில பிள்ளைகள் தங்களுடைய வயதான தாய், தந்தையை அனாதைகளாக, விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்ற இந்தக் காலக்கட்டத்தில், சடலத்தை பாதுகாத்த நாய் தொடர்பிலான, அந்த நெஞ்சை உருவைக்கும் சம்பவமொன்று பதுளையிலேயே இடம்பெற்றுள்ளது.

பதுளை – நெலும்கம வித்தியாலத்துக்கு முன்பாக அமைந்துள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே, இவ்வாறு செய்துள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 6ஆம் திகதி மாலை 6 மணியளவில், அயல்வாசிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார், வீட்டின் கூரைகளை உடைத்து உள்ளே சென்றபோது, அவ்வீட்டில் வசித்த மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். அந்த மூதாட்டியின் சடலத்துக்கு அருகில், நாயொன்று காவல் காத்துக்கொண்டிருந்துள்ளது.

வீட்டுக்குள் குதித்த, பொலிஸார் முன்கதவை திறந்ததும், அந்த நாய், முன் கதவுக்கு முன்பாக போய் நின்றுள்ளது.

இந்நிலையில், சடலம் மீதான நீதவான் விசாரணை, பதுளை நீதவான் ஆனந்த மொரகொடவின் முன்னிலையில் இடம்பெற்றது. அப்போது, அந்த வீட்டு வாசலில், அந்த நாய், நின்றுகொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நித்திரையில் இருந்தவாறே இவர் மரணித்திருக்கலாம் என்றும், இவர் உயிரிழந்து பல நாட்கள் சென்றிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சடலம் பதுளை தேசிய வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற விசேட வைத்தியரால் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றிடம் கையளிக்குமாறு பதில் நீதவான் ஆனந்த மொரகொட, பதுளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை “தான் கொழும்பு-தலவத்துகொட பகுதியில் உள்ள வீட்டில் பணிபுரிவதாகவும், தனது மனைவிக்கு துணையாக நாய் மட்டுமே இருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின், 71 வயதான கணவர் தெரிவித்துள்ளார்.