வவுனியா கொலை - பிரேத பரிசோதனையில் முக்கிய தகவல்!
வவுனியா- நெளுக்குளம் சுற்றுவட்ட வீதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், நீரில் மூழ்கியதாலேயே மரணமாகியுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
வவுனியா நீதிவான் திருமதி தஸ்னீம் பௌசான் மற்றும் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தம்மி லொவிஸ்லோவா ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டனர். இதனையடுத்து சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கழுத்தில் சிறிய கத்திக்குத்து காயம் இருந்துள்ளது எனினும், இறப்பு காயத்தால் நிகழவில்லை. நீரில் மூழ்கி மூச்சுத் திணறியே பெண் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டு விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.