கொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியை பகுப்பாய்வு செய்ய உத்தரவு!
வவுனியா - நெளுக்குளத்தில் நேற்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கையடக்க தொலைபேசியை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது வீட்டின் அறையில் இரத்தம் காணப்பட்டதுடன் , கதவு மற்றும் கதவு பூட்டு போன்றவற்றில் இரத்த அடையாளமும் , பெண்ணின் கையடக்க தொலைபேசி , கத்தி , வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் ஆகியவற்றை பொலிஸார் பார்வையிட்டதுடன் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகை அடையாளம் மற்றும் கிணற்றில் ஆழம் , தடயங்கள் என்பவற்றை ஆய்வு செய்தனர். குறித்த பெண்ணின் மரணத்தில் பொலிஸாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டமையினால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் தம்மி லோபிஸ் லேவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்கள் மற்றும் சடலத்தினை பார்வையிட்டதுடன் பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது பிள்ளைகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலத்தினை பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி தொலைபேசியில் உள்ள தகவல்களில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா என ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும் 5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது -32) எனவும் இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.