இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்து வருகின்றது. ஐ.நா கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் மீண்டும் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டு வரப்படவுள்ள நிலையில் (16.03.2019) அன்று பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் (10 Downing Street) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம், சுப்பிரமணியம் கேசவன், பொன்ராசா புவலோஜன் ஆகியோரினால் குறித்த மனுவானது கையளிக்கப்பட்டது. மேற்படி மனுவில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரதானமான முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்களும், மனிதநேயக் குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைய அறிக்கைகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
அந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கும், யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை இதுவரையில் வழங்கத் தவறியுள்ளமையாலும், கடந்த கால வன்முறைகள் மீளெழுவதைத் தடுப்பதன் பொருட்டு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளமையாலும் ஓர் நிலையான அரசியல் தீர்வினைக் காண்பதை நோக்காகக் கொண்டும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிப்பதன் பொருட்டும் இத்தீவின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கும் குறித்த மனுவினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு இரு வருட கால அவகாசங்கள் வழங்கியும் அவற்றை இலங்கை அரசு செயற்படுத்த தவறியுள்ள நிலையில் இம் முறை மீண்டுமொரு கால அவகாசத்தினை இலங்கைக்கு வழங்காது இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தொடர் பிரசன்னம், வடகிழக்கில் நடந்துவரும் தொடர்ச்சியான சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், இராணுவசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கையின் விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் எனவும் குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.