கடற்படையினரை வெளியேற்றக் கோரி சிலாவத்துறையில் பாரிய பேரணி!
மன்னார் - சிலாவத்துறையில் கடற்படையினரை அகற்றி தமது காணிகளை மீள வழங்கக் கோரி இன்று மதியம் 1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜூம்மா தொழுகையின் பின்னர் சிலாவத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாக வந்தனர்.
பின்னர் சிலாவத்துறையில் இன்று 24 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்ற பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்கு அருகில் நின்று கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றி குறித்த காணியை மீண்டும் மக்களுக்கு வழங்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மெசிடோ நிறுவனம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியதோடு, மன்னாரில் இருந்தும் மக்கள் சென்று ஆதரவு வழங்கினர்.