பிரேசில் பள்ளியில் சரமாரி துப்பாக்கிசூடு: 10 பேர் பலி

ஆசிரியர் - Admin
பிரேசில் பள்ளியில் சரமாரி துப்பாக்கிசூடு: 10 பேர் பலி

பிரேசில் நாட்டில் முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாலோ பகுதியில் அமைதியாக நடந்துகொண்டிருந்த பள்ளி ஒன்றில், மர்ம நபர்கள் இரண்டு பேர் முகமூடி அணிந்து வில் அம்பு, வெடிபொருள்கள் ஆகியவற்றுடன் நுழைந்துள்ளனர். 1600 மாணவர்கள் இருந்த அந்த பள்ளியில் இருவரும் திடீரென துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர். 

இதில் ஐந்து மாணவர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர். அதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இருவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டனர். இறந்த பள்ளி மாணவர்கள் அனைவருமே 13 வயது முதல் 16 வயதிற்குட்பட்டவர்களாக இருந்துள்ளனர். 

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபொழுது, தாக்குதல் நடத்தியவர்கள் அதே பள்ளியில் படித்த 17 வயதான கில்ஹெர்மி டவுஸி மோன்டிரோ மற்றும் 25 வயதான ஹென்றி டி காஸ்ட்ரோ என்கிற முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்தது. தாக்குதலுக்கு முன்பாக ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காரை இருவரும் திருடி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மோன்டிரோ தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் 26 புகைப்படங்களை பதிவிட்டுள்ளான். துப்பாக்கிகளுடன் இருப்பது, காமிராவை நோக்கி நடுவிரலை காட்டுவது, மண்டை ஓடு மற்றும் எலும்பு படங்களை கொண்ட கைக்குட்டை அணிந்திருக்கும் படங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

முன்னாள் மாணவர்களான இருவரும் எந்த காரணத்திற்காக இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர் என்பது தெரியாமல் பொலிஸார் திணறி வருகின்றனர். இதற்கிடையில் அந்நாட்டு மக்கள் பலரும் தாக்குதலுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு Rio de Janeiro பகுதியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர் நடத்திய தாக்குதலில் 12 மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு