SuperTopAds

மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா? அம்பலப்படுத்திய செயற்கைகோள் படங்கள்

ஆசிரியர் - Admin
மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா? அம்பலப்படுத்திய செயற்கைகோள் படங்கள்

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்து உலக நாடுகளை அதிர வைத்தது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் தொடர் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத திட்டங்களை அந்த நாடு நடத்தியது. இது அமெரிக்காவுக்கு சவாலாக அமைந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டது.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினார்கள்.

அந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாயின. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா பாடுபடும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து வடகொரியா அணுகுண்டு வெடித்து சோதிக்கவில்லை. ஏவுகணை சோதனைகளையும் நடத்தவில்லை. ஆனால் வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் அகற்றப்படவும் இல்லை.

இந்த நிலையில் இரு தலைவர்களும் சமீபத்தில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த மாதம் 27, 28-ந்தேதிகளில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளில் ஒரு பகுதியைக் கூட அகற்ற முன்வராததுதான் இந்த பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணம் என வடகொரியா கூறியது.

இந்த நிலையில் வடகொரியா மீண்டும் தனது அணு ஆயுதப்பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகருக்கு அருகே அமைந்துள்ள சானும்டாங்க் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் அல்லது ஏவுகணையை ஏவுவதற்கான பணிகள் நடந்து வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தப் படங்களில் சானும்டாங்க் ஏவுதளத்தில் பெரிய அளவிலான வாகன நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கடந்த காலத்தில் இப்படி காணப்பட்டபோது அந்த நாடு, ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனை நடத்தி இருக்கிறது. எனவே இப்போது மறுபடியும் அந்த நாடு ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனையில் ஈடுபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடகொரியாவின் பிரதான ராக்கெட் ஏவுதளமான சோஹேயும் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.

அதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், “நமது புரிதலில் இருந்து விலகிச்செல்கிற வகையில் அவர் (வடகொரிய தலைவர் கிம்) ஏதாவது செய்தால் அது எனக்கு ஏமாற்றத்தைத் தரும். இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் மீண்டும் சோதனைகளை நடத்த தொடங்கினால் அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்” என்று குறிப்பிட்டார்