பாகிஸ்தானில் எரிவாயு குழாய்த் தகர்ப்பு! பலூச் விடுதலைப் புலிகள் அமைப்பு பொறுப்பேற்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயுக் குழாய்க்கு தீ வைத்த சம்பவத்திற்கு பலூச் விடுதலைப் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பலூசிஸ்தானில் உள்ள தேரா பக்தி பகுதியில் இருந்து பாகிஸ்தானின் ஏனைய பகுதிகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் சுயி எரிவாயு ஆலைக்கு அருகே உள்ள குழாய்க்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து தகர்த்திருந்தனர்.
இதனால் பாரிய சத்தத்துடன் குழாய் வெடித்து, தீப்பிடித்ததில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தன.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த சம்பவத்திற்கு பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வரும் பலூச் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை, தங்கள் பகுதியின் இயற்கை வளங்களை பாகிஸ்தான் சுரண்டுவதாகவும், எரிவாயுவை பஞ்சாப் பகுதிக்கு கொண்டு செல்வதால் தங்கள் பகுதி மக்களுக்கு எரிவாயு கிடைப்பதில்லை எனவும் குற்றம்சுமத்தி அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.