லண்டனில் விமான நிலையங்களுக்கு பார்சலில் அனுப்பப்பட்ட வெடிபொருட்கள்!
லண்டனில் இரு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்துக்கு 3 வெடிபொருள் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. லண்டன் நகர விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வாட்டர் லூ ரயில் நிலையத்துக்கு 3 பார்சல்கள் வந்துள்ளன. அதில் ஒரு பார்சலை பிரித்த போது தீப்பிடித்துள்ளது.
இதனால் பதறிப் போன விமான நிலைய அதிகாரி, ஸ்காட்லாந்து யார்டு போலீசின் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு தகவல் கொடுத்தார். இதேபோன்ற பார்சல்கள், லண்டன் நகர விமான நிலையம் மற்றும் வாட்டர் லூ (Waterloo) ரயில் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் அவை மீட்கப்பட்டன. அந்த பார்சல்களை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பார்சல்களில், காதல் சின்னம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவை அயர்லாந்து நாட்டின் தபால் முத்திரைகள் என்பது உறுதி செய்யப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அயர்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர். வெடிபொருள் பார்சல்களால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை.