SuperTopAds

"பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு மேலும் நெருக்கடி": மற்றுமொரு அமைச்சர் பதவி விலகினார்!

ஆசிரியர் - Admin

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின் பெண் அமைச்சர் ஜேன் பில்போட் விலகியுள்ளார். ட்ரூடோ அரசாங்கம் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் தனக்கு திருப்தியில்லை என பதவி விலகிய முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் அண்மைகால செயற்பாடுகள் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும், தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை காணப்படுவதாகவும் ஜேன் பில்போட் கூறியுள்ளார். குறிப்பாக புதிய சட்டமா அதிபர் விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையான வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவும், அதனால் தான் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் அவர் தனது இராஜனாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக அரசாங்கம் சட்டமா அதிபர் விவகாரத்தை கையாண்டமை திருப்தியடைய கூடியவகையில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜேன் பில்போட்டின் இராஜினாமா தனக்கு கவலை அளித்தாலும், கனேடியர்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். அத்துடன், பில்போட்டின் சேவைக்கு பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பில்போட்டின் பதவி விலகல், ட்ரூடோவின் ஆட்சியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமரின் அமைச்சரவையில் இருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.