SuperTopAds

புதூர் ஆயுதப் பொதி வழக்கில் இதுவரை 23 பேர் கைது! - சிங்களவர்களும் சிக்கினர்

ஆசிரியர் - Admin
புதூர் ஆயுதப் பொதி வழக்கில் இதுவரை 23 பேர் கைது! - சிங்களவர்களும் சிக்கினர்

வவுனியா- கனகராயன்குளம், புதூர் பகுதியில் ஆயுதப் பொதியை வீசிவிட்டு ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தை அடுத்து, பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக, கடந்த புதன்கிழமை அதிகாலை மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் மன்னாரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வெள்ளிக்கிழமை மேலும் இருவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் இருந்து மதகுரு மற்றும் 5 சிங்களவர்களும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

பாதாள உலக குழுக்களை அடிப்படையாக கொண்டு விடுதலைப் புலிகளினால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்டு அவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதுடன் மன்னாரில் கைது செய்யப்பட்டவரே இதனை இயக்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இலுப்பைக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் வீட்டில் இருந்து கிளைமோர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 23 பேரும் பல்வேறு இடங்களில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களுடன் தொடர்புபட்ட சிலர் இந்தியாவிற்கு தப்பியோடியுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.