SuperTopAds

அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஹம்ஸா பின்லேடனின் சவுதி அரேபிய குடியுரிமை ரத்து

ஆசிரியர் - Admin
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஹம்ஸா பின்லேடனின் சவுதி அரேபிய குடியுரிமை ரத்து

அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்திருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. 

அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. 

இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். 

பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தேடி வருகிறது. 

அத்துடன் ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா சமீபத்தில் அறிவித்துள்ளது. 

இவ்வாறு பயங்கரவாத பட்டியலில் ஹம்ஸா பின்லேடன் பெயர் சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவரது குடியுரிமையை ரத்து செய்திருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதமே குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அதற்கான கோப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

ஆனால், நேற்றுதான் அரசிதழில் முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்பிறகே, இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது. 

ஹம்ஸாவின் குடியுரிமை ரத்து குறித்து ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து அரசிதழில் வெளியிடப்பட்டது? என்பது குறித்து சவுதி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

ஆனால், அவரது தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவித்ததால், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது.