SuperTopAds

"பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்க கூடாது" - நிக்கி ஹாலே!

ஆசிரியர் - Admin

அமெரிக்க வாழ் இந்தியரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் டிரம்ப் அரசின் புதிய கொள்கைகளை பாராட்டி உள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை மற்றும் வளத்தை கருத்தில் கொண்டு புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்கிறது. அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து அதற்கான பிரதி பலன் திரும்ப கிடைக்கிறதா? என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது. 

அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெறும் பாகிஸ்தான் ஐ.நா.சபையில் பல விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்துள்ளது. 2017-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.7100 கோடி (1 பில்லியன் டாலர்) நிதி உதவி பெற்றது. இது அதிக பட்ச நிதியாகும். இந்த நிதி பாகிஸ்தான் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, நெடுஞ்சாலை, மின் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்பட்டன.

இத்தகைய வெளிநாட்டு நிதி உதவி நண்பர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களில் 76 சதவீத அளவுக்கு பாகிஸ்தான் எதிராகத்தான் வாக்களித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவது நீண்ட கால வரலாறு. அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்காது கூடாது. இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அரசு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளது.

எனவே பயங்கரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது நடவடிக்கையை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிக்கி ஹாலே தென் கரோலினா மாகாணத்தின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து விலகினார்.