SuperTopAds

'அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிர்ப்பு' - நாடாளுமன்றத்தில் 26-ந்தேதி ஓட்டெடுப்பு!

ஆசிரியர் - Admin
'அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிர்ப்பு' - நாடாளுமன்றத்தில் 26-ந்தேதி ஓட்டெடுப்பு!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்க டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட டிரம்ப் திட்டமிட்டார். 

இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. எனினும் எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இந்த நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலை பிறப்பித்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன் அமலில் வந்துள்ள இந்த நடவடிக்கை அமெரிக்காவில் அரசியல் மற்றும் சட்ட மோதலுக்கு வழி வகுத்துள்ளது. டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதைப்போல டிரம்பின் குடியரசு கட்சியிலும் அதிருப்தி காணப்படுகிறது. 

இந்தநிலையில் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த தீர்மானம் மீது 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டெடுப்பு நடத்தப்படும் என பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி கூறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அங்கு இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. பின்னர் அது செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இந்த தீர்மானம் அங்கு நிறைவேறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் அவசர நிலைக்கு எதிராக குடியரசு கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், அந்த கட்சி எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடும் என தெரிகிறது. அவ்வாறு செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறிவிட்டால், பின்னர் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அப்படி தனது பார்வைக்கு இந்த தீர்மானம் வந்தால், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார். இதனால் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வருமா? என்பதிலும் கேள்வி எழுந்துள்ளது. எனினும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால், டிரம்பின் வீட்டோ அதிகாரத்தையும் முறியடிக்க முடியும். ஆனால் தனது அதிருப்தியை உறுப்பினர்கள் அவ்வாறு நிராகரிக்க மாட்டார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவில் வழக்கத்துக்கு மாறாக பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த அவசர நிலை, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக தற்போது நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், இதன் எதிர்காலம் விரைவில் தீர்மானிக்கப்படும் என தெரிகிறது.