பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினர் அஞ்சலி!
காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில், கடந்த 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய தூதரகம் அமைந்துள்ள வளாகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் 200 -க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப், பலியான துணை ராணுவ வீரர்களுக்கு, தானாக முன் வந்து இந்திய வம்சாவளியினர் உலக அளவில் அஞ்சலி செலுத்தி ஆதரவு அளிப்பது, புல்வாமா தாக்குதல் சம்பவம் உலக அளவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதை காட்டுகிறது” என்றார்.