தென் தமிழகத்தில் கரையொதுங்கிய படகு! இலங்கையிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலா?
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தீவிரவாதிகள் நுழைந்திருக்க கூடும் என தமிழக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன்தீவு மீனவ கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் நேற்று காலை ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியது. இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடலோர காவல்படையினர், சட்டம் ஒழுங்கு பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், உளவுத்துறையினர் சென்று படகை பார்வையிட்டனர். அப்போது அந்த படகு இலங்கையை சேர்ந்தது என தெரியவந்தது.
அந்த படகில் ஒரு வெற்று டீசல் கேன் கிடந்தன. பொலிஸார் அருகில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதரில் 25 குதிரை திறன் கொண்ட இயந்திரம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இடத்துக்கு சற்று தொலைவில் கயிறுகள், தலா 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 கேன்கள் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தில் சிலர் அமர்ந்து சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் தென்பட்டது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த இயந்திரம், கரை ஒதுங்கி இருந்த படகுக்கு சொந்தமானது என தெரியவந்தது. சமீப காலமாக இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது.
எனவே இந்த படகில் தங்கம் கடத்தி வந்திருக்கலாம். அதை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு, மீண்டும் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருக்கலாம். இதற்காகத்தான் 3 கேன்களில் டீசல் நிரப்பி தயாராக வைக்கப்பட்டுள்ளன.
படகு மற்றும் இயந்திரம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதுதவிர இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவக்கூடும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக பொலிஸாருக்கு மத்திய அரசு அடிக்கடி எச்சரிக்கை விடுக்கும். எனவே தீவிரவாதிகள் கூட இலங்கையில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த படகில் வந்தவர்கள் மணியன்தீவு மற்றும் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் தங்கி இருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்றும் விசாரித்து வருகின்றனர்.
கரை ஒதுங்கி இருந்த படகு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த இயந்திரம் ஆகியவற்றை பொலிஸார் டிராக்டரில் ஏற்றி வேதாரண்யம் கடலோர காவல்படை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
படகு கரை ஒதுங்கி இருப்பதும், மர்ம நபர்கள் மணியன்தீவு பகுதிக்குள் ஊடுருவி இருக்கலாம் என கூறப்படுவதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<