"கிறிஸ்மஸ் தீவின் சர்ச்சைக்குரிய தடுப்பு மையம் மீண்டும் திறப்பு" - பிரதமர் ஸ்கொட் மொறிசன்

ஆசிரியர் - Admin

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்பு மையத்தை மீண்டும் திறக்க அவுஸ்ரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற வாக்கெடுப்பின் வரலாற்று தோல்வியை அடுத்து, பிரதமர் ஸ்கொட் மொறிசன் இன்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். 

தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டமூலத்திற்கு நேற்று நாடாளுமன்ற அனுமதி கிடைத்தது. அரசு சாரா நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அல்லது அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்ரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்ற ரீதியில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்புதிய சட்டம் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ஆட்கடத்தல்காரர்கள் இதை காரணமாக வைத்து தமது வியாபாரத்தை மீள ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. இச்சட்டம் நாட்டின் கடுமையான எல்லை பாதுகாப்பு கொள்கைகளை வலுவிழக்கச் செய்வதோடு ஆட்கடத்தல்காரர்களை பாதுகாப்பதாக அமையும் எனவும் பிரதமர் விமர்சித்துள்ளார்.

Radio
×