SuperTopAds

இராஜதந்திரம் தோற்றுவிட்டதை ஒப்புக்கொண்டு விட்டது கூட்டமைப்பு! - சிவசக்தி ஆனந்தன்

ஆசிரியர் - Admin
இராஜதந்திரம் தோற்றுவிட்டதை ஒப்புக்கொண்டு விட்டது கூட்டமைப்பு! - சிவசக்தி ஆனந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

'கடந்த நான்கு வருடமாக தமிழ் பேசும் மக்களுடைய பேராதரவுடன் வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் குறைந்த பட்சமான அன்றாட பிரச்சினையை கூட தீர்க்கவில்லை. விசேடமாக புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் அதற்கூடாக நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் மீறப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வருடம் மாகாணசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என தேர்தல் ஆண்டாக இருக்கப்போகின்றது.

இப்படியான தேர்தல் ஆண்டுக்காலத்திலே தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வரப்படும் என்ற விடயம் நடக்கப்போவது இல்லை. மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் போனோர் போன்ற விடயங்களிற்கு தீர்வு காணப்பட முடியாத நிலைதான் இருக்கும் ஏனெனில் தெற்கில் உள்ள எழுபது வீதமான சிங்கள மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதிலே இரு பிரதான கட்சிகளும் மிக கவனமாக இருக்கின்றன.

குறிப்பாக் ஐக்கிய தேசிய கட்சியோ, சுதந்திர கட்சியோ சிங்கள மக்களின் ஆதரவை பெற வேண்டுமாயின் தமிழ் மக்களிற்கு நிரந்தர தீர்வினை வழங்குவேன் என கூறி ஆதரவை பெறமுடியாதது. ஆகவே தமிழ் மக்களின் இப்பிரச்சனைகளிற்கும் தீர்வு காண முடியாது.

இந்த நான்கு வருடமும் இவ் அரசாங்கம் தமிழ் மக்களினை ஏமாற்றியதுடன், இந்த நான்கு வருடமும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏமாற்றப்பட்டு இன்று இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றி விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்று தெரிவித்தார்.