அமெரிக்காவின் முன்னாள் எதிரியான வியட்நாமில் "டிரம்ப் – கிம்" சந்திப்பு சாத்தியமாகுமா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான அடுத்த கட்ட நேரடி சந்திப்பு தொடர்பாக அமெரிக்க மற்றும் கொரிய ராஜதந்திரிகள் கலந்துரையாடி வருகின்றனர்.
வடகொரியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி ஸ்டீபன் பெய்கன், தென்கொரிய வௌிவிவகார அமைச்சர் காங் கியூங்-வா மற்றும் கொரிய தீபகற்ப விசேட பிரதிநிதி லீ டூ ஹூன் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சியோலில் சந்தித்துக் கொண்டனர்.
தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வந்து இறங்கிய பின்னர், தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான வன்முறை போருக்கு வித்திட்டது.
ஏறத்தாழ 44 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதே நகரத்தில் வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர் கால நண்பரான வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வியட்நாமில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது உறுதியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடக்கும் இடம் தனாங் அல்லது ஹனொய் நகரங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் ஹனொய் நகரத்திலேயே இரு தலைவர்களும் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க பிரதிநிதி பெய்கன் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக பியோங்யாங்கில் வைத்து குறித்த ராஜதந்திரிகள் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.