தங்க நகை வாங்க சென்ற நபர் செய்த மோசமான காரியம்
ஏறாவூரிலுள்ள நகைக் கடையொன்றில் தங்க நகைகள் வாங்குவதற்காக வந்த நபரொருவர் அங்கிருந்த நகைகளை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சீ.சீ.டி.வி காட்சிப் பதிவுகளின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் செய்துள்ள முறைப்பாட்டில்,
நேற்று மாலை 4.30 மணியளவில் நகைக்கடை திறந்திருந்தபோது இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.
அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருக்க மற்றைய நபர் உள்ளே வந்து தான் தங்கச் சங்கிலிகளும், தங்க மோதிரமும் வாங்கப் போவதாகக் கூறினார்.
அப்பொழுது விதம் விதமான தங்கச் சங்கிலிகளையும், மோதிரங்கள் உள்ள பெட்டியையும் எடுத்து அந்த நபர் முன்வைத்து ஒவ்வொன்றாகப் காட்டிய போது எதுவும் பிடிக்கவில்லை என்று கூறினார்.
அதனால் அவற்றை அலுமாரிக்குள் வைப்பதற்கு நான் எழுந்த பொழுது என் கையிலிருந்த நகைப் பெட்டியை அபகரித்துக் கொண்டு அந்த நபர், ஏற்கனவே அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த நபருடன் தப்பித் தலைமறைவாகி விட்டார்.
அந்த நகைப் பெட்டிக்குள் சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான 48 தங்க மோதிரங்களும், 11 தங்கச் சங்கிலிகளும் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.