வெனின்சுலாவிற்கு பயணிக்க வேண்டாம் என கனேடியர்களுக்கு எச்சரிக்கை!
வெனிசுவேலாவிற்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவிற்கான பயண ஆலோசனையை சர்வதேச விவகாரங்களுக்கான கனடா அமைப்பு புதுப்பித்துள்ளது.
அதன்படி இந்த பயண எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் தற்போது நிலவிவரும் மனிதாபிமான மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இப்பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவில் நிலவும் நிலையற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் காரணமான அங்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கனடா குறிப்பிட்டுள்ளது. மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் நீர் போன்ற அடிப்படை தேவைகளின் பற்றாக்குறைகள் வெனிசுவேலாவில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலை புறக்கணித்தமையால், அங்கு 46.1 வீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இதனால், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நிக்கோலஸ் மதுரோ 58 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.
எனினும், இவரது வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, நிக்கோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தியும், புதிய தேர்தலை நடத்தக் கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டுள்ளார். இதற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.