SuperTopAds

அமெரிக்காவின் செல்வத்தை சுரண்டுவதாக சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Admin
அமெரிக்காவின் செல்வத்தை சுரண்டுவதாக சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்க வேலைவாய்ப்புகளையும், செல்வத்தையும் சுரண்டுவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க காங்கிரஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட உரையாற்றினார். 

இதன்போதே அவர் இவ்வாறு சீனா மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, பல தசாப்தங்களாக பேரழிவை ஏற்படுத்தும் வர்த்தக கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு பல ஆண்டுகளாக இலக்கு வைக்கப்பட்டுள்ள எமது வேலைவாய்ப்புகளையும், எமது செல்வம் திருடப்படுவதையும் சீனா முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதனை நான் சீனாவிற்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். இந்நிலையில், நாம் தற்போது சீனாவுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பணியாற்றி வருகிறோம். ஆனால், அதற்கு நீண்டகால வர்த்தக பற்றாக்குறைகளை நீக்கி, அமெரிக்க வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்கு நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சீனா முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.