SuperTopAds

'அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது' - இந்திய அரசு கண்டனம்!

ஆசிரியர் - Admin
'அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது' - இந்திய அரசு கண்டனம்!

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. 

இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்பதை தெரிந்தே பதிவு செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்திய மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கைது குறித்து மேலதிக தகவல்களை, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இந்திய அரசு கோரியுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க இந்திய தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. "மாணவர்களின் மரியாதை குறித்தும் நலன் குறித்தும் கவலைப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை இந்திய தூதர் சந்திக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்" என்றும் இந்திய வெளியுறவுத்துறையால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களை பதிவு செய்ய வைத்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

"இதுதொடர்பான முழு விவரங்களையும், கைதாகியுள்ள மாணவர்கள் குறித்த அவ்வப்போதான தகவல்களையும், இந்திய அரசிடம் அளிக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளோம். மேலும் மாணவர்களை உடனையாக விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பமின்றி நாட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என்று கோரியுள்ளோம்" என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ள வாஷிங்டனில் தொலைப்பேசி உதவி அழைப்பு எண் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா` செய்தி தெரிவிக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்தியா, தங்களிடம் தகவல்களை கோரியிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் மேற்கொண்டு தகவல்களை வழங்கவில்லை.

அமெரிக்க அதிகாரிகளால் இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இது முதல்முறையல்ல. 2016ஆம் ஆண்டு குடிவரவு அதிகாரிகளால் போலியாக அமைக்கப்பட்ட வடக்கு நியூ ஜெர்சி என்ற பல்கலைக்கழகம் மூலம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போதைய இந்த நடவடிக்கையில், ஃபர்மிங்கடன் பல்கலைக்கழத்தின் புகைப்படங்கள் அதன் வலைதளத்தில் பகிரப்பட்டிருந்தன அதில் மாணவர்கள் வகுப்புகளில் இருப்பது போன்றும், நூலகத்தில் படிப்பது போன்றும், புல்தரையில் அமெர்ந்திருப்பது போன்றும் புகைப்படங்கள் இருந்தன.

இளநிலைப்படிப்புக்கு 8,500 அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்றும், முதுநிலை மாணவர்களுக்கு 11,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்துக்கான முகநூல் பக்கமும், அதில் காலண்டர் நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. கடந்த வாரம் வெளியான ஆவணங்கள்படி இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமையின் ரகசிய பணியாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த போலி பல்கலைக்கழக நடவடிக்கை 2015ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்குள் மாணவ விசா மூலம் நுழைந்து அங்கேயே தங்கும் வெளிநாட்டு நபர்களை பிடிக்க அமைக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மிஷிகனில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இந்த மாணவர்களுக்கு இது சட்டவிரோதமான முறை என தெரிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் வெளிநாட்டு குடிமக்களால் `பே டூ ஸ்கீமி`ற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்கள் தங்கள் மாணவ விசாக்களை தக்க வைத்துக் கொள்ள போலியாக கல்லூரியில் பதிவு செய்வதே இந்த `பே டூ ஸ்கீம்` ஆகும். இதில் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.