பிரேசில் அணை உடைந்த விவகாரத்தில் பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!
தென்கிழக்கு பிரேசிலில் அணை உடைப்பெடுத்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் வேல் (Vale) சுரங்க நிறுவனத்தின் இரு பொறியிலாளர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டதாக அரச வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அணையின் பாதுகாப்பிற்கு சான்றளிக்க தவறிய குற்றச்சாட்டில் குறித்த இரு பொறியிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார். தேடுதலின் போது இரு வீடுகளிலிருந்தும் பல ஆவணங்கள், கணினிகள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
குறித்த அனர்த்தத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 300-ஐ எட்டும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் சுரங்க நிறுவனமான Vale நிறுவனத்திற்கு சொந்தமான அணை கடந்த 25ஆம் திகதி உடைப்பெடுத்து பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.