'அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வகையில் வெப்பக்காற்று' - 44 பேர் பாதிப்பு!
அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத வகையில் வெப்பக்காற்று வீசி வருவதாகவும், இதனால் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளான சுமார் 44 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவில் தற்போது கோடை காலம் ஆரம்பமாகியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெப்பக்காற்று வீசிவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அடிலெய்ட் வடக்கு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) 49.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடிலெய்ட் நகரில் 47.7 டிகிரி பதிவானது. இது 1939-ம் ஆண்டில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று தெற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள 13 நகரங்களிலும் கடும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்க மக்களுக்கு குளிர்ச்சியான பானங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக மக்கள் மர நிழலில் தஞ்சமடைந்துள்ளனர். வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளது. இதனால் பலவிதமான வெப்ப நோய்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.