மருத்துவர் இல்லாமையால் முச்சக்கர வண்டியில் பிரவசம் நடக்கும் அவலம், வீதியில் இறங்கிய மக்கள்..
மன்னார்- வவுனியா மாவட்டங்களின் எல்லை பகுதியில் உள்ள இரணை இலுப்பை குளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறுகோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்ப வைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
'கடந்த ஒருமாதகாலமாக வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாதாந்த மருத்துவ சேவையைப் பெற்றுகொள்ளும் 200க்கும் மேற்பட்டோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர் ஒருவர் நியமிக்கபட்டிருந்த போதும் அவர் தற்போது இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். எமது கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுவதுடன் மீள்குடியேற்றம் மேற்கொள்ளபட்டது முதல் நிரந்தரமாக ஒரு வைத்தியர் நியமிக்கப்படவில்லை.
26 கிராமங்களைச் சேர்நத மக்கள் குறித்த ஆரம்பசுகாதார வைத்திய நிலையத்தால் பயன்பெற்று வருகின்றனர். தற்போது வைத்தியர் இன்மையால் நீண்ட தூரம் சென்று வவுனியா பூவரசங்குளம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிற்கு சென்றே சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர நோயாளிகளை இங்கு அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியாவும் மாற்றம் செய்து வந்தனர். வைத்தியர் இன்மையால் அம்புலன்ஸ்சில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வவுனியாவுக்குச் சென்றால் அதிக பணச்செலவு ஏற்படுகின்றது.
கர்பிணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியில் குழந்தை பிந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே எமது நிலையை கருத்தில் கொண்டு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோருவதுடன்
தற்காலிகமாக முன்னர் கடமையாற்றியவரையாவது மீண்டும் நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அப்பகுதியால் வருகைதந்த குறித்த வட்டாரத்தின் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினர் வாகனத்தில் இருந்து இறங்காமல் ஆர்பாட்டக் காரர்களுடன் சில வினாடிகள் பேசி விட்டு அங்கிருந்து சென்றார்.
இந்தச் சம்பவம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியது.